நமீபியா அதிபர் உடல் நல குறைவால் காலமானார்.. உலக    நாட்டு தலைவர்கள் இரங்கல்

 

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நமீபியா அதிபர் காலமானார். அவருக்கு வயது 82.

தெற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடு நமீபியா. இந்நாட்டின் அதிபராக ஹஜி ஜிங்கொப் செயல்பட்டு வந்தார். இதனிடையே, அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகர் விண்ட்ஹொக்யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ஹஜி ஜிங்கொப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிபர் ஹஜி ஜிங்கொப்பின் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமீபியா அதிபர் ஹஜி உயிரிழந்த நிலையில் இடைக்கால அதிபராக நங்கொலா முபுமா செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து நமீபியா அதிபர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “நமீபியாவின் நீண்ட கால பிரதமராகவும் மூன்றாவது அதிபராகவும் இருந்து வந்த ஜியிங்கோப் புற்றுநோய் காரணமாக காலமானார்.

கடந்த 1941-ம் ஆண்டு வடக்கு நமீபியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார் ஜியிங்கோப். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். இதன் காரணமாக சுமார் 30 ஆண்டுகள் வரையில் போட்ஸ்வானா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வந்தார்.

நமீபிய தேசம் ஒரு புகழ்பெற்ற மக்களின் சேவகர், ஒரு விடுதலைப் போராட்ட சின்னம், நமது அரசியல் அமைப்பின் தலைமை சிற்பி மற்றும் நமீபிய வீட்டின் தூண் ஆகியவற்றை இழந்து விட்டது” என இரங்கல் தெரிவித்து உள்ளது.