கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பல்.. பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு

 

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இங்கிலாந்தில் இருந்து 2,200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது. பனிப்பாறை மீது மோதிய டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளை, சுற்றுலா பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று டைட்டனிக் கப்பலின் சிதைந்த பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனமான ஓஷன் கேட் நிறுவனம் சிறப்பு சுற்றுலா சேவை அளித்து வந்தது. இந்த சுற்றுலாவுக்கு பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோருன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் ஜூன் 19-ம் தேதி கடலுக்குள் சென்றனர்.

நீருக்கு அடியில் சென்ற 1.45 மணி நேரத்திலேயே இவர்கள் சென்ற நீர் மூழ்கி கப்பல் தொடர்பை இழந்து மாயமானது. மாயமான தகவல் கிடைந்ததும் கடந்த 4 நாள்களாக  22 அடி நீள நீர்மூழ்கியை பல நாடுகளின் ஆய்வாளர்களும் தேடி வந்தனர். அமெரிக்க கப்பல்படை, விமான படையினர், கனடா நாட்டு கப்பல் படையினர், விமானப் படையினர் என ஒரு பெருங்குழு சோனார் உள்ளிட்ட கருவிகளின் உதவியுடன் தேடிப் பார்த்தனர்.

இந்த சூழலில் கனடா நாட்டின் கப்பல் படையினர் நேற்று தேடியபோது காணாமல் போயிருந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த நிலையில் அந்த சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது.