இந்திய மாணவர் மர்ம மரணம்.. அமெரிக்காவில் தொடரும் சோகம்.. இதுவரை 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நேற்று மர்மமான முறையில் இந்திய மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கிளீவ்லேண்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர் உமா சத்ய சாய் காடே முதுகலை படித்து வந்தார். இவர் அப்பகுதியில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது சடலத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்களின் மீதான தாக்குதலின் தொடர்ச்சி தான், மாணவர் உமா சத்யகாடேவின் மரணம் என்று அங்குள்ள மாணவர்கள் கூறியுள்ளனர். கடந்த மாதம் கிளீவ்லேண்டில் இருந்து மற்றொரு இந்திய மாணவர் முகமது அப்துல் அராபத் கிளீவ்லேண்ட் பகுதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐதராபாத் மாணவர் சையத் மசாஹிர் அலி சிகாகோவில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். பின்னர், சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்தது. 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.