மெக்சிகோ அதிபர் தேர்தல்..  முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு!

 

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு  செய்யப்பட்டார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் புதிய அதிபர், பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில், அதிபர் பதவிக்கு ஆளுங்கட்சியான மொரேனா கட்சியைச் சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் தேர்வு  செய்யப்பட்டார். அவர் 58.75 சதவீத வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் கிளாடியாவை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பெண் வேட்பாளர் கால்வெஸ் (தேசிய செயல் கட்சி) 28.25 சதவீத வாக்குகள் பெற்று இரண்டம் இடத்தை பிடித்தார். 

மத்திய இடதுசாரி கட்சியான எம்.சி கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் ஆலவரஸ் மேனஸ் 10.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கினார். இதேபோல் கிளாடியாவின் மொரேனா கட்சி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.