பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு.. 100-க்கும் மேற்பட்டோர் பலி!

 

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இந்த நிலையில் பப்புவா நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலியா நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து பலர் சிக்கி கொண்டனர். உடனே மீட்புப்படையினர் விரைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலி எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.