ருவாண்டாவில் வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. 8 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ருவாண்டாவில் முதன்முறையாக மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சர் சபின் சன்சிமனா கூறியுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மார்பர்க் எனப்படும் அதிக தொற்றும் தன்மை கொண்ட வைரசின் பரவல் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் 30 மாவட்டங்களில், 7 மாவட்டங்களில் இதன் பரவல் காணப்படுகிறது. இந்த பரவலை அந்நாடு உறுதி செய்து உள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சை முறையோ இல்லை.
இதன் பாதிப்பு ஏற்பட்ட நபர் ரத்த கசிவுடனான கூடிய காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவதுடன், 88 சதவீதம் அளவுக்கு மரண விகிதமும் உள்ளது. இதுகுறித்து ருவாண்டாவின் சுகாதார அமைச்சர் சபின் சன்சிமனா கூறும்போது, பரவலை தடுத்து நிறுத்த உதவியாக, தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் பரிசோதனை செய்தல் ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நாட்டில் முதன்முறையாக இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறிய அவர், அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். ருவாண்டாவில் மார்பர்க் வைரசின் பரவலால் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரசின் பரவலானது இதுவரை, ஆப்பிரிக்காவின் தான்சானியா, காங்கோ, கென்யா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், ருவாண்டாவிலும் முதன்முறையாக இதன் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.