மனைவியை பலமுறை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்.. இங்கிலாந்து மக்களை நடுங்க வைத்த சம்பவம்
இங்கிலாந்தில் பட்டப்பகலில் மனைவியை கணவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் மாகாணத்தின் பிராட்ஃபோர்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை குல்சுமா அக்தர் (27) என்பவர் பலமுறை கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கணவர் ஹபிபுர் மஸும் மூன்று நாட்களுக்கு பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது. மட்டுமின்றி, பொதுவெளியில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் வழக்கு பதியப்பட்டது. தற்போது அவர் விசாரணைக் கைதியாக உள்ளார்.
இந்த நிலையில் குல்சுமா அக்தரின் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது திருமண நாளில் பதிவு செய்யப்பட்ட புகைப்படம் என்றே கூறப்படுகிறது. இருவரும் குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றெ நம்பப்படுகிறது.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம் பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே குல்சுமாவின் தாயார் தெரிவிக்கையில், தாம் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும், எனது இளைய மகளை இழந்துவிட்டு தவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்திற்கு அவர் சென்ற பின்னர் தாம் தனித்துவிடப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்ட அன்று மட்டும் தம்மிடம் வீடியோ காலில் பேசி கொள்ளவில்லை என்றும் குல்சுமாவின் தாயார் கதறியுள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் மஸும் மட்டுமின்றி, மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குல்சுமாவின் குடும்பம் வங்கதேச நாட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.