கோடாரியுடன் பயணிகளை சிறைபிடித்த நபர் சுட்டுக்கொலை.. சுவிட்சர்லாந்தில் ரயில் ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்

 

சுவிட்சர்லாந்தில் ரயில் ஒன்றில் கோடரியுடன் மர்ம நபர் பயணிகளை சிறைபிடித்த நிலையில், போலீசார் முன்னெடுத்த துரித நடவடிக்கையால் சிறை பிடிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுவிட்சர்லாந்தில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார். அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் கண்டக்டரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயிலின் கண்டக்டர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதலில் வாட்ஸ்அப் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரமாக தொடர்ந்த நிலையில், இறுதியில் ரயிலில் அதிரடியாக போலீசார் நுழைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோடாரியால் போலீசாரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் போலீசார் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து பணயக்கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் யார் என்பது குறித்த தகவல்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே நடந்தேறும். கடந்த 2022 ஜனவரியில், விலைமதிப்பற்ற உலோகங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களை அணுகும் முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரு தம்பதி மற்றும் ஒரு நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.

ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடியவே, சம்பவயிடத்தைவிட்டு மாயமாகினர். 2021 நவம்பரில் பிரபல கைக்கடிகார நிறுவன இயக்குனர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சிறை பிடித்த குழு ஒன்று, அவரது குடியிருப்பில் இருந்து தங்க கட்டிகளை கொள்ளையிட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.