சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் தேர்வு..!

 

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனாவில் பிரதமராக பதவி வகித்து வந்தவர் லி கெகியாங். எனினும், 2013-ம் ஆண்டு பதவிக்கு வந்ததும் தாராளவாத சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்ற அதிக நம்பிக்கையுடன் பார்க்கப்பட்டார். ஆனால், அவரது அதிகாரங்களை சீன அதிபர் ஜீ ஜின்பிங் கட்டுப்படுத்தியதுடன், அவரை ஓரங்கட்டவும் தொடங்கினார். அவருக்கு பதிலாக, கூட்டணியில் இருந்தவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார். 

இந்த நிலையில், நாட்டின் பிரதமராக கடைசி முறையாக அவர் நேற்று விடை பெற்று கொண்டார். ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே கடந்த அக்டோபர் மாதம் கம்யூனிஸ்டு கட்சியின் நிலை குழுவில் இருந்து விலகினார். அந்நாட்டின் சமீபத்திய வரலாற்றின்படி, சக்தி வாய்ந்த தலைவராக பதவி வகிக்கும் ஜின்பிங்குக்கு மிக விசுவாசமுடன், அவருக்கு அடுத்தடுத்த பதவிகளில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் செயலாற்றி வருகின்றனர். 

இந்த சூழலில், ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (63) அந்நாட்டின் புதிய புரதமராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதற்கு முன் அவரை சீன அதிபர் ஜீ ஜின்பிங் பிரதமர் பதவிக்கு இன்று நியமனம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக அரசியல்வாதியாக செயல்பட்டதுடன், ஜீ ஜின்பிங்கின் செயலாளராகவும் ஆனார். 

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜீ ஜின்பிங் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார். மூன்று ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவின் புதிய பிரதமர் நியமனம் மற்றும் அறிவிப்பு அடுத்தடுத்து இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.