தொடர் கனமழையால் நிலச்சரிவு.. 26 பேர் பலி.. இந்தோனேசியாவில் சோகம்!

 

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 14 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி அங்கு 19 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் இந்த நிலச்சரிவில் மாயமான 11 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வெள்ளத்தால் 26 பாலங்கள், 45 மசூதிகள் மற்றும் 25 பள்ளிகள் சேதமடைந்தன. மேலும் 13 சாலைகள், 279 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் 300 சதுர மீட்டர் தோட்டங்கள் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மலைப் பிரதேசங்கள், நதியின் சமவெளியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கனமழையைத் தொடா்ந்து நிலச்சரிவுகளும் திடீா் வெள்ளப்பெருக்கும் தொடா்ச்சியாக ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.