பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான பரிதாபம்

 

பாகிஸ்தானில் உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் ஷாங்லா மாவட்டத்தில் ஜீப் ஒன்றில் குடும்பத்தினர் பயணம் செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 பிள்ளைகள் மற்றும் ஆண் ஓட்டுநர் என 8 பேர் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். உறவினர்களை சந்தித்துவிட்டு அனைவரும் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழு, தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும், முதற்கட்ட அறிக்கையின்படி, மோசமான சாலையின் நிலைமையே விபத்திற்கு காரணம் என்றும் காவல்துறை அதிகாரி இம்ரான் கான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.