இந்தியாவை பின் தொடரும் ஜப்பான்.. விண்ணில் பாய்ந்தது எச்2ஏ!

 

இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் நாடு ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை முடித்துள்ளது.

இதேபோல் ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான பயண திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலத்தை ஜப்பான் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் SLIM (smart lander investigating moon) விண்கலம் இன்று (செப். 7) காலை 4.40 மணிக்கு ஏவப்பட்டது. இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் அடுத்த 4 முதல் 6 மாதங்களில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.