காசா மீது இஸ்ரேல் தாக்குதல்.. ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு.. ஹமாஸ் அதிர்ச்சி தகவல்

 

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7-ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசாமுனை மீது இஸ்ரேல் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 31வது நாளாக நீடித்து வருகிறது.

போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்குதான் எங்களுடைய முழு ஆதரவு என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அரபு மக்களின் கொந்தளிப்பும் அதிகரித்து வருகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹமாஸ் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை காசா பகுதியின் வடக்குப் பகுதியை மட்டுமே உள்ளடக்கியது எனத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி, தரைவழி தாக்குதலில் இதுவரை 9,770 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,330 ஆக அதிகரித்துள்ளது.