பலத்த காயங்களுடன் இஸ்ரேலிய பெண்.. என்னை காப்பாத்துங்க.. அதிர்ச்சி வீடியோ!

 

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பெண்ணின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பெண்ணின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். ஹமாஸின் இராணுவப் பிரிவான Izz ad-Din al-Qassam Brigades, 21 வயதான மியா ஸ்கெம் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண்ணின் கை கட்டுகளால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அந்த வீடியோவில் பேசும் அப்பெண், காசா எல்லைக்கு அருகில் உள்ள சிறிய இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டைச் சேர்ந்தவர் என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்கிறார். தன்னுடை பெயர் மியா ஸ்கெம் என கூறும் அவர், தாக்குதல்கள் நடந்த நாளில் கிப்புட்ஸ் ரெய்மில் நடந்த சூப்பர்நோவா சுக்கோட் இசை விழாவில் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

அந்த விழாவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மியா உட்பட மற்றவர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு மேலான அந்த வீடியோவில், மியாவின் காயத்திற்கு ஒருவர் கட்டுப்போடுவதை காண முடிகிறது. தனது காயத்திற்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ததாக மியா ஸ்கெம் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் மியா ஸ்கெம் கடத்தப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. அத்துடன், அதிகாரிகள் மியாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், “ஹமாஸ் வெளியிட்டுள்ள காணொளியில் தம்மை மனிதாபிமானமுள்ளவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இருப்பினும், அவர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொன்று கடத்தும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு. மியா உட்பட அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.