காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்.. குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

 

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.  மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. 

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 88 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். போரின் தொடர்ச்சியாக, காசாவில் 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வீடுகளை இழந்தும், பசியில் வாடியும் வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது. 

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் - ஹமாஸ்  போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.