காசா முனையில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 71 பேர் பலி; 289 பேர் காயம்

 

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.  மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மோதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 88 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். போரின் தொடர்ச்சியாக, காசாவில் 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வீடுகளை இழந்தும், பசியில் வாடியும் வருகின்றனர்.  

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இன்று காசா முனை பகுதியில் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், பொதுமக்களில் 71 பேர் பலியாகி உள்ளனர். 289 பேர் காயமடைந்து உள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் தாக்குதலில் 71 பேர் பலியான நிலையில், ஹமாஸ் அமைப்பு தலைமையை குறி வைத்தோம் என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறும்போது, காசா முனை பகுதியில் கான் யூனிஸ் என்ற இடத்தில் முகமது டீப் என்பவரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய புள்ளி இவர் என பலராலும் நம்பப்படுகிறது.