இஸ்ரேல் தாக்குதல்.. காசாவில் பலி எண்ணிக்கை 2,450 ஆக உயர்வு!

 

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இரு பக்கமும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இதில் இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,450 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,200 ஆகவும் உயர்ந்துள்ளது. எனினும் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.