இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்பட 2 பேர் சுட்டு கொலை.. கனடாவில் அதிர்ச்சி!

 

கனடாவில் இந்திய தொழிலதிபர் பூட்டா சிங் சூட்டுக் கொலை செய்யப்பட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் தெற்கு எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் மக்கள் சிலர் திரளாக கூடியிருந்தனர். அப்போது வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்டனர்.  அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டனர்.  51 வயது நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.  அவரை துணை நிலை மருத்துவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஏறக்குறைய 50 பேர் கூடியிருந்தபோது, இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.  அவர்களில் பலர் தெற்காசிய வீடு கட்டுமான சமூகத்தில் உறுப்பினர்கள் ஆவர். இதனை தொடர்ந்து, எட்மண்டன் நகர முன்னாள் கவுன்சிலராக இருந்த மற்றும் எட்மண்டன் காவல் பணியின் முன்னாள் அதிகாரியான மொகிந்தர் பங்கா சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியான பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  அவர், கில் பில்ட் ஹோம்ஸ் என்ற பெயரிலான கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். 2 பேரின் பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி எட்மண்டன் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.