இலங்கையை தொடர்ந்து தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை..! ஏன் தெரியுமா?
தாய்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாப் பயணிகள். இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.2 கோடி வெளிநாட்டவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம், தாய்லாந்து நாட்டிற்கு 2,567 கோடி டாலர் வருமானமாக கிடைத்துள்ளது.
மேலும், தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சீனா நாட்டினர் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. நடப்பாண்டு தாய்லாந்து அரசு 28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்ற இலக்கில் இத்தகைய சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம், கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கை வரும் மக்கள் கட்டணமில்லா விசா சேவையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது 2024 மார்ச் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத் துறையை நம்பியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.x