நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்திய இளைஞர்.. கதறி தவிக்கும் பெற்றோர்!

 

கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து இந்திய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் அப்புவால் கிராமத்தைச் சேர்ந்த சரண்தீப் சிங் (22). இவர், கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், அப்புவால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்துள்ளார்.

அவர், சரன்தீப்பின் தந்தையான ஜோரா சிங்கிடம், கடைசியாக உங்கள் மகனிடம் எப்போது பேசினீர்கள் என்று கேட்க, அவர் மகனை மொபைலில் அழைத்துள்ளார். சரன்தீப்பின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, அவர் சரன்தீப்புடன் தங்கியிருந்த நண்பர் ஒருவரை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த நண்பர், சரன்தீப் கடந்த வியாழனன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றதாகவும், அதற்குப்பின் வேலைக்கு செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சரன்தீப் தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பவேயில்லை. ஆகவே, சரன்தீப்பின் மாமா, நயாகரா நீர்வீழ்ச்சி பொலிசாரை தொடர்பு கொண்டு அவரைக் காணவில்லை என புகாரளித்துள்ளார். ஆனால், அவர்கள் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்கள்.

ஆம், சரன்தீப் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாகவும், அவர் தன் மொபைலை கீழே வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.  

தகவல் அறிந்து சரன்தீப்பின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்துவரும் நிலையில், சரன்தீப்புடன் முன்பு வேலை செய்த நான்கு இளைஞர்கள் அவருக்கு தொந்தரவு கொடுத்துவந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த சரன்தீப்பின் தாயான பிந்தர் கௌர், தன் மகனுடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கனடா போலீசாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.