இரட்டை குழந்தைகளை கொன்று இந்திய தம்பதி தற்கொலை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

 

அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கவின் கலியோர்னியா மாகாணத்தில் உள்ள சான் மேடியோ நகரில் வசித்து வந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (38). இவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா (37). இந்த தம்பதிக்கு 4 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். ஆனந்த் சுஜித் ஹென்றி இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 12-ம் தேதி அவர்களை உறவினர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பதில் எதுவும் வராததால், சந்தேகம் அடைந்த அந்த உறவினர், ஆனந்த் சுஜித்தின் நண்பர்களை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.

இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற நண்பர்கள் சிலர், வீட்டுக்கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் குளியல் அறையில் ஆனந்த் சுஜித் ஹென்றி, ஆலிஸ் பிரியங்கா ஆகியோரும், படுக்கை அறையில் இரட்டை குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், இது குறித்து சான் மேடியோ பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 பேர் இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.