இடைவிடாத கனமழை.. சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி.. பாகிஸ்தானில் சோகம்!
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. ராவல்பிண்டியில் 200 மி.மீ. அளவுக்கு மழை பொழிவு இருந்தது. அரபி கடலில் இன்று தீவிரமடைந்து உள்ள பருவகால சூழலால், தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்லாமாபாத் நகரில் பெஷாவர் சாலையில் கோல்ரா மோர் பகுதி அருகே, கட்டுமான பணியில் இருந்த பாலம் ஒன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 100 அடி அகலம் மற்றும் 11 அடி உயரத்தில் அந்த சுவரையொட்டி, வசிப்பதற்காக கூடாரம் ஒன்றை தொழிலாளர்கள் அமைத்து வந்தனர்.
இந்நிலையில், அந்த சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்பு பணியாளர்கள் இயந்திரங்களின் உதவியுடன் மீட்டுள்ளனர். 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இஸ்லாமாபாத் நகரின் முகமதி நகர பகுதியில் இதேபோன்றதொரு சம்பவத்தில் 11 வயது சிறுமி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இதனால், கனமழை தொடர்புடைய சம்பவங்களில் மொத்தம் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.