இலங்கையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து.. 11 பேர் பலி!
இலங்கையில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் பொலன்னறுவை மாவட்டம் கதுருவெல பகுதியிலிருந்து 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தனர். பலர் ஆற்றில் குதித்து பேரூந்தினுள் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும் பயணிகளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 41 பேர் பொலன்னறுவை மற்றும் மன்னம்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமானோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 10) குருநாகல் - அம்பன்பொல பகுதியில் நிகழ்ந்த மற்றொரு பேருந்து விபத்து நேர்ந்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு போலீசார் கூறியுள்ளனர். கூரகலவிற்கு யாத்திரைச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பேருந்து அம்பன்பொல பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னருடன் மோதி விபத்துக்குள்ளானது.