மாயமான மனைவியை தேடிச் சென்ற கணவன்.. பாம்பின் வாயில் இருந்து மீட்பு.. இந்தோனேசியாவில் அதிர்ச்சி!
இந்தோனேசியாவில் காணாமல் போன தனது மனைவியை தேடி சென்ற கணவன், ராட்ச பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள சைட்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிரியாட்டி. 30 வயதான இவர், நேற்று காலை, சந்தைக்கு செல்வதற்காக, தன் சகோதரரை அழைப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், அவர் இன்னமும் வந்து சேரவில்லை என அவரது சகோதார் சிரியாட்டியின் கணவரான அடியன்சா (36) என்பவரை மொபைலில் அழைத்துக்கூற, மனைவியைத் தேடி புறப்பட்டுள்ளார்.
வழக்கமாக மனைவி நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து சென்ற அவர், வழியில் ஓரிடத்தில் தன் மனைவியின் காலணிகள் கிடப்பதைக் கவனித்துள்ளார். அக்கம் பக்கத்தில் மனைவியைத் தேடும்போதுதான் அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியை அடியன்சா கண்டுள்ளார். 30 அடி நீள ராட்சத மலைப்பாம்பு ஒன்றின் வாயிலிருந்து இரண்டு மனிதக்கால்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அது தன் மனைவிதான் என்பது தெரிந்ததும், அடியன்சா உடனடியாக அந்த பாம்பைக் கொன்று தன் மனைவியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் சிரியாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். அந்த பாம்பு சிரியாட்டியைக் கொத்தி, அவரை சுற்றிக்கொண்டு, இறுக்கி, பின் அவரை விழுங்கி கொண்டிருக்கும்போது தான் அவரது கணவர் அவரைக் கண்டுபிடித்துள்ளார்.