பாகிஸ்தானில் கனமழை.. மின்னல் தாக்கியதால் 39 பேர் பரிதாப பலி!

 

பாகிஸ்தானில் கனமழை மற்றும் மின்னல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு பகுதியான பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கனமழை, வெள்ளம், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் அந்நாட்டில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் 2022-ம் ஆண்டில், பாகிஸ்தானை பாதித்த வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துக்களால் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.