கொலஸ்ட்ரால் குறைக்கும் ஹெல்த் சப்ளிமெண்ட் மாத்திரை விபரீதம்! 5 பேர் பலி, சிகிச்சையில் 114 பேர்!

 

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மாத்திரையை எடுத்துக்கொண்ட 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 22-ம் தேதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது.

எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை உட்கொண்ட 5 பேர் இறந்துள்ளனர். மேலும் 100 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து அதிபர் அகிஹிரோ கோபயாஷி கூறுகையில், நாங்கள் ஆழ்ந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இறந்தவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அவர் வருத்தம் தெரிவித்தார். முழு சுகாதார உணவுத் தொழில் மற்றும் மருத்துவத் தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு அவர் மன்னிப்பு கேட்டார், மேலும் சேதத்தைத் தடுக்கவும் நெருக்கடி நிர்வாகத்தை மேம்படுத்தவும் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.