ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி.. உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம்!

 

ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.  மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. 

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 88 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (62) நேற்று கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. 

கடந்த ஜூலை 13-ம் தேதி தெற்கு காசாவில் முகமது தைப் வசித்து வந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் முகமது தைப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.