பெரும் சோகம்.. பிரேசிலில் விமானம் விழுந்து விபத்து.. 14 பேர் உடல் கருகி பலி!

 

பிரேசிலில் நடந்த விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டு சென்றது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அமேசான் மாநில ஆளுநர் வில்சன் லிமா கூறுகையில், விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

விமான நிறுவனம், விபத்து நடந்ததை ஒப்புக்கொண்டு, நடந்து வரும் விசாரணையை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து எந்த குறிப்பிட்ட தகவலையும் வழங்கவில்லை.