234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் முதன்முறை.. நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி பதவி நீக்கம்!!

 

அமெரிக்க  வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்து கெவின் மெக்கார்த்திக்கு எதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்தது. விவாதத்தின் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றிபெற்றதை அடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

ஆளுங்கட்சிக்கு சாதகமான கெவின் மெக்கார்த்தியின் நடவடிக்கைகள் குறித்து பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றை அவர் மதிக்காததே பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர முக்கியமான காரணம் என்றும் குடியரசு கட்சி தலைவர்கள் கூறினர்.

கடந்த 234 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதவும் சொந்தக் கட்சியினரே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றியிருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது எந்த கருத்துக்களையும் அவர் கூறவில்லை. அவரை யாரும் நம்பாததே இந்த முடிவுக்கு காரணம் என்று குடியரசு கட்சியினர் கூறியுள்ளனர். ஏற்கெனவே அவரது நடவடிக்கைகள் குறிதது பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது அவர் மீதான பதவிநீக்க தீர்மானத்திற்கு முக்கியமான காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.