விமானத்தில் ஏற சென்ற விமான பணிப்பெண் மயங்கி விழுந்து பலி.. அதிர்ச்சியில் பயணிகள்!

 

இத்தாலியில் விமானத்தில் ஏறும் போது விமான பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் கலாப்ரியா பிராந்தியத்தில் உள்ள ரெஜியோ கலாப்ரியா விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் விமானத்தில் ஏற சென்ற விமானப் பணிப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான கேப்ரியல்லா கரியோ (57) ஐடிஏ ஏர்வேஸ் விமான சேவைக்கு பிறகு சபாவுடியாவுக்கு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

விமான பயணத்திற்கு முன்னதாக அவரது உடல்நிலை மோசமாக இருந்த போதிலும், தன்னுடைய குடும்பத்துடன் இணைய வேண்டும் என்ற ஆவலில், அவர் விமான பயணத்தை தொடர்ந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் ஏறிய சில வினாடிகளில் கேப்ரியல்லா மயங்கி விழுந்தார், மேலும் இதனை பார்த்த விமான பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவசர சேவைகள் உடனடியாக வந்த போதிலும், கேப்ரியல்லாவை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கேப்ரியல்லாவின் மரணத்திற்கான காரணம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது, இருப்பினும் அதிகாரிகள் திடீர் நோய் காரணமாக அவர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேப்ரியல்லாவின் இறுதிச்சடங்குகள் இன்று சபாவுடியாவில் நடைபெற உள்ளது. சபாவுடியாவின் மேயர் அல்பர்டோ மோஸ்கா, கேப்ரியல்லாவின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.