நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலி.. அமெரிக்காவில் சோகம்!!
அமெரிக்காவில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க சென்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், போஸ்டன் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கனமழையால், சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கின.
இந்த நிலையில், அமெரிக்காவின் தென் கரோலினா மாகணத்தின் சார்ல்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் கிழக்கு பென்சில்வேனியாவுக்கு தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.
அப்போது கனமழையால் சூழ்ந்துள்ள வெள்ளத்தில், அந்த குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். அவர்களில் தந்தை, 4 வயது மகன் மற்றும் பாட்டி தப்பியுள்ளனர். தாயார் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என அப்பர் மேக்பீல்டு நகர காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என தி ஹில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
இதுதவிர, அந்த குடும்பத்தின் 2 வயது சிறுமி மற்றும் 9 மாத குழந்தையை பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று போலீசார்ர் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று, வெள்ளத்தில் வரிசையாக சாலையில் நின்ற 11 கார்களில் 3 கார்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இவர்களில் 10 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர்.