அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் வரலாற்றில் முதலாவது மாநாடு! கார்த்திகேய சிவசேனாபதி நேரில் வாழ்த்து!!

 

டல்லாஸ் மாநகரத்தில் 10 பள்ளிகளுடன் செயல்பட்டு வரும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது.

அலன் நகரில் அமைந்துள்ள கிரெடிட் யூனியன் ஆஃப் டெக்சாஸ் அரங்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அயலகத் தமிழர் வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்று வாழ்த்துரை ஆற்றினார்.

காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்ற இந்த மாநாட்டில் கல்விக் கழகத்தின் அனைத்து பள்ளிகளின் மாணவர்களின் பங்கேற்பில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடை பெற்றது. சிறப்பு நிகழ்ச்சிகளாகமாணவர்களின் பங்கேற்புடன் இசை அமைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தனின் ”தமிழ் ஓசை” மற்றும் முனைவர்.பிரதிபா பாட்லியின் இயக்கத்தில் “ குற்றாலக் குறவஞ்சி” நடன நாடகம் இடம் பெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினர் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ்ப் பள்ளிப் படிப்பை முடித்து பட்டம் பெறும் மாணவ மாணவியர்களுக்கு பட்டயம் வழங்கி வாழ்த்தினார். பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தன்னார்வப் பணி செய்துவரும் தன்னார்வலர்களுக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “இவ்வளவு பிரம்மாண்டமான அரங்கத்தில் தமிழ்ப் பள்ளியின் மாநாடு நடைபெறுவது பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. ஆயிரத்து 300 மாணவர்களும் குடும்பத்தினருடன் இங்கே கூடியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழ்ப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்து வரும் உங்கள் அனைவருக்கும் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சார்பிலும் நம்முடைய முதலமைச்சர் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போல் வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவின் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன்களைப் பேணிக்காக்கும் வகையில் அயலகத் தமிழர் வாரியத்தை நம்முடைய முதலமைச்சர் தொடங்கி திறம்பட நடத்தி வருகிறார்.

தமிழர்களுக்கு ஏதாவது இன்னல் என்றால் நம்முடைய வாரியம் முனைப்புடன் முன் வந்து உரிய தீர்வு காண செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏதாவது சட்டச் சிக்கல் என்றால் தமிழர்களுக்கு உதவுவதற்காக வாரியத்திற்காக சிறப்பு காவல் கண்பாணிப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

அயலகநல வாரியத்தின் முனைப்பான செயல்பாட்டுடனும் அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் அட்லாண்டா இந்தியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடனும், பெற்றோரை இழந்து தவித்த சிறுவனை தமிழ்நாட்டில் வசிக்கும் உறவுப் பெண்ணான குழந்தையின் சித்தியின் கண்காணிப்பில் வளர்வதற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றோம்.

உள்ளூர் தமிழ் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவதற்காக அயலகத் தமிழர் நல வாரியம் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் தமிழ்மணி கமலநாதன் மாநாட்டிற்கு தலைமை தாங்கி, கழகத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் அமெரிக்கப் பிரதிநிதி கால்டுவெல் வேள்நம்பி மாணவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். புரவலர் பால்பாண்டியன் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தார்.

65 மாணவர்களுடனும் 15 தன்னார்வலர்களுடனும் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் 10 பள்ளிகளுடன் 1300 மாணவர்கள் மற்றும் 400 தன்னார்வலர்களுடன் மாபெரும் வளர்ச்சி பெற்று செயல்பட்டு வருகிறது.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம் - சிறப்புத் தகவல்கள்
  • டல்லாஸ் மாநகரின் 9 நகரங்களில் 10 பள்ளிகள்
  • 1300 மாணவர்களுடன் 400 தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள்    
  • ஆண்டு தோறும் ஒரு குறளுக்கு ஒரு டாலர் பரிசுடன் திருக்குறள் போட்டி
  • ஆத்திச்சூடி, பேச்சுப்போட்டி மற்றும் முப்பரிமாண விளக்கப் போட்டிகள்
  • 2024ம் ஆண்டு போட்டிகளில் 500 மாணவர்கள்  பங்கேற்பு
  • 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ளனர்
  • 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்கப் பள்ளியில் தமிழ் மொழிக்கான அயல்மொழிப் பாட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
  • 8000 ஆயிரம் நூல்களுடன் செயல்பட்டு வரும் நூலகம்
  • வாரம் இரண்டு நூல்கள் படிக்கும் வகையில் மாணவர்களுக்கு இலக்கு