விமானத்தில் இருக்கைக்காக சண்டை.. 2 பயணிகள் இடையே அடிதடி.. வைரலாகும் வீடியோ!
தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ விமானத்தில் இருக்கைக்காக 2 பயணிகள் சண்டை போட்ட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால், அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். காலியாக இருந்த சீட்டில் ஏற்கனவே அமர்ந்திருந்த பயணி அமர இருக்கைக்கு வந்தார்.
அப்போது இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு கேட்டார். அதற்கு அந்த பயணி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சண்டையிட்டனர். அவர்களின் சண்டையை விலக்கி விட விமான ஊழியர்கள் போராடினர். அதற்காக பயணிகள் இருவரையும் பிடித்து சண்டையை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தனர்.
மறுபுறம் இருவருக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து மற்ற பயணிகள் பீதியடைந்து அலறுவதை வீடியோவில் காணலாம். இறுதியாக, இருவரையும் சமாதானம் செய்து ஊழியர்கள் சோர்வடைந்து விட்டனர். விமானம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.