பிரபல அரசியல் தலைவர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்!

 

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் புதன்கிழமை (நவ. 29) காலமானார். அவருக்கு வயது 100.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ரிச்சர்டு நிக்சன், ஜெரால்டு போர்டு ஆட்சியில் 1973 -1977 காலகட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை கொள்கையில் பல முக்கிய கடுமையான முடிவுகளை எடுத்துள்ளார். மேலும், ரிச்சர்டு நிக்சன், ஜெரால்டு போர்டு அதிபர்களின் ஆட்சியில் 1969 - 1975 காலகட்டத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

தற்போதுள்ள ஜெர்மனியின் வெய்மர் குடியரசு, ஃபர்த் பகுதியில் 1923 மே 27 ஆம் நாள் பிறந்தார். 1943-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். வியட்நாம் போர் முடிவுக்கு பேச்சுவார்த்தை நடத்தியதற்காக 1973 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். தனது வாழ்நாளில் ஜோ பைடன் உள்பட 10- க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆனால், கிழக்கு திமோர் படையெடுப்பில் இந்தோனேசிய ராணுவ சர்வாதிகாரியை ஆதரித்தது, தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியின் அங்கோலா படையெடுப்பை ஆதரித்தது, சிலியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்க புலனாய்வு அமைப்புடன் இணைந்து பணியாற்றியது என பல சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில், நிக்சன் மற்றும் கிஸ்ஸிங்கர் இருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக, கிஸ்ஸிங்கர் அப்போது இந்தியர்களை ‘Bastards’ என்று வசைபாடினார். பின்னர் தனது தரக்குறைவான பேச்சுக்காக வருந்துவதாகக் கூறினார்.

சிலி நாட்டில் தேர்தல் மூலம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவிநீக்கம் செய்ய புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து பணியாற்றி, பெரும் சர்ச்சையில் சிக்கினார். வயது முதிர்வு காரணமாக அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை மாலை காலமானார். அவரது கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு அவரது மறைவை உறுதி செய்துள்ளது.