சோமாலியாவில் பரபரப்பு! தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலி.. ஆளுநர் உள்பட 11 பேர் காயம்!

 

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த மாளிகைக்குள் திடீரென ஒரு வாகனம் அனுமதியின்றி உள்ளே புகுந்தது. 

வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட அந்த வாகனத்தில் இருந்தவர் உள்ளே நுழைந்ததும் தன்னைத்தானே வெடிக்க செய்தார். இதில் அந்த வாகனத்தில் இருந்தவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜூபலாந்து மாகாண ஆளுநர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.