உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!!

 

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார். இந்த நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் திடீரென வீழ்ச்சியடைந்ததால், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்தன. 

இதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போது ஃபோர்ப்ஸ் வார இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் லூயிஸ் விட்டன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்டு உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில், தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயரத் தொடங்கின. சுமார் 100 சதவீதம் அளவுக்கு பங்குகள் உயரத் தொடங்கிய நிலையில், 18 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், கடந்த 3 மாதத்தில் இழந்த இடத்தை மீண்டும் எலான் மஸ்க் எட்டிப்பிடித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தொடர்ந்து எலான் மஸ்க் ஆட்குறைப்பு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் இந்த செயலால் டிவிட்டர் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் பணியாற்றி வந்தனர். தொடர்ந்து, டிவிட்டரில் அதிகாரப்பூர்வ நீல நிற பேஜ்களை பெறப் பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனாலும் எலான் மஸ்க் இதனைக் கைவிடாமல் ட்விட்டரில் நீல நிற கணக்குக்களுக்குப் பணம் வசூலிப்பதை அமல்படுத்தியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தில் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டதே, அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.