12வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்.. உண்மையை போட்டுடைத்த மஸ்க் !

 

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்கு ரகசிய குழந்தை பிறந்ததாக செய்தி வெளியான நிலையில், உங்களுக்குதான் அது ரகசியம், எனக்கில்லை என எலான் மஸ்க் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், AI மனிதனின் மூளையை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். Artificial Intelligence துறையில் கலக்கி வரும் ChatGpt-யை உருவாக்கியவர்களில் ஒருவரான மஸ்க் பின்னர் அதிலிருந்து விலகிவிட்டார். நவீன தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தும் மஸ்க், உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து அவ்வப்போது கவலை தெரிவித்து வருகிறார்.

அதை தனது சொந்த வாழ்க்கையிலும் செயல்படுத்தி வருவதிலும் மஸ்க் தவறவில்லை. ஜஸ்டின் வில்சன் என்பவரை முதலில் மணந்த மஸ்க்கு 2002-ம் ஆண்டு பிறந்த குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து ஜஸ்டின் வில்சன் மூலம் மஸ்க்குக்கு 2004-ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மஸ்க்கு கைய், சாக்சன், டாமியன் என்ற 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன.

2008-ம் ஆண்டு வில்சனை விவாகரத்து செய்த மஸ்க், ரிலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் அவர் மூலம் மஸ்க் குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கனடாவைச் சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் உறவில் இருந்த மஸ்க்கு, இவர் மூலம் 3 குழந்தைகளுக்கு தந்தையானார். இதுதவிர தனது நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மூலம் இரட்டை குழந்தைக்கு தந்தையானார்.

ஷிவோன் ஜிலிஸ் தற்போது 3வது குழந்தையை பெற்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மஸ்க் 12வது முறையாக தந்தையானதாக கூறப்பட்ட நிலையில், ரகசிய குழந்தையா என கேள்வி எழுப்பட்டது. வழக்கம்போல் தனது கிண்டலான முறையில் பதில் அளித்துள்ள மஸ்க். உங்களுக்குதான் அது ரகசியம், எனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் அது ஏற்கனவே தெரியும் என அதிர வைத்தார்.

மக்கள்தொகை சமநிலை நீடிக்க, ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக 2.1 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என மஸ்க் வலியுறுத்தி வரும் நிலையில், அதைவிட 6 மடங்கு குழந்தைகளை பெற்று முன்மாதிரியாக திகழ்கிறார் என்றே குறிப்பிடலாம்.