கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?

 

இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடான கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனமானது கத்தார் நாட்டு ஆயுதப்படைகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த 8 பேரும் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த நீர் மூழ்கி கப்பலின் சிறப்பம்சமே தண்ணீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு திறமை வாய்ந்தது. அந்த கப்பல் குறித்து இவர்கள் 8 பேரும் உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டன. இதையடுத்து அவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டு உளவுத் துறையினரால் தோஹாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

8 இந்தியர்களை கைது செய்தது போல் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் அதே ஆண்டு நவம்பர் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார். இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து கத்தார் அரசு வெளிப்படையாக சொல்லவில்லை. இவர்கள் 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டாலும் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தகவல் கிடைத்தது.

அந்த 8 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி அவர்களது குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அது போல் அக்டோபர் 1-ம் தேதி கத்தாருக்கான இந்திய தூதரும் துணைத் தூதரும் அவர்கள் 8 பேரையும் பார்ப்பதற்கு கத்தார் அரசு அனுமதி அளித்தது. அக்டோபர் 3-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை 7வது முறையாக நடந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினருடன் இந்திய அரசு தொடர்பில் இருக்கிறது. சட்ட உதவிகளை செய்து அந்த 8 பேரையும் விரைவில் தாயகம் திருப்பி கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் அவர்கள் நிரபராதிகள் என இந்திய அரசு வாதிட்டு வந்தது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி அண்மையில் கூறுகையில் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நாள் முதல் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டு பதியப்பட்டது என்பது விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளது. அதனால் சட்ட ரீதியான விவகாரம் குறித்து நான் பேச விரும்பவில்லை. கத்தார் நீதிமன்றத்தில் அந்த 8 பேருக்கும் சட்ட ஆலோசனைகளை வழங்கும் பிரதிநிதி உள்ளார். நீதிமன்றம் எந்த மாதிரியான தீர்ப்பை அளிக்க போகிறது என்பதை பார்ப்போம். அவர்கள் நிச்சயம் இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என மிகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு கத்தார் நீதிமன்றத்தில் வெளியானது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் கத்தாரில் சிறை வைக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அது குறித்து நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் சட்டக் குழுவினருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவோம். அது போல் தூதரக உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த தீர்ப்பு குறித்து கத்தார் நாட்டு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்துள்ளது.