அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வானார் டொனால்டு டிரம்ப்!
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அமெரிக்காவில் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர்கள் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.
இந்த தேர்தலில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு அதிபர் பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
டிரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 277 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம், இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார். இதனிடையே அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.