நாய் இறைச்சிக்கு தடை.. தென்கொரியாவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!

 

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் கொரியாவின் நூற்றாண்டு கால பழமையான பாரம்பர்ய பழக்க வழங்கங்களில் ஒன்று, நாய் இறைச்சியை உட்கொள்ளுதல். இந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. இத்தகைய சூழலில்தான், தென் கொரியாவின் ஆளுங்கட்சியான பீப்பிள் பவர் கட்சி (People Power Party), இந்தாண்டின் இறுதிக்குள் நாய் இறைச்சியை உட்கொள்வதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.

நாய் இறைச்சியை உட்கொள்ளும் தென் கொரிய மக்களின் பழக்கத்துக்கு, சர்வதேச அளவில் பல விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தற்போது, தென் கொரியாவிலேயே இதற்கான எதிர்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது, அந்த நாட்டு இளைய தலைமுறையிடம் வளர்ந்துவரும் பொது உணர்வு தான். இது, விலங்குகளின் நலன் மீதான தென் கொரியச் சமூகத்தின் மாறுபாடடைந்த பார்வையைப் பிரதிபலிக்கிறது.

மேலும், சர்வதேச விலங்கு உரிமைக் குழுக்களின் விமர்சனங்கள் மற்றும் உலகளவில் வளர்ந்து வரும் நாய் இறைச்சி நுகர்வுக்கு எதிர்ப்புக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாய் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகங்களுக்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவியுடன் கூடிய சலுகைக் காலம் வழங்குவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது.

அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அந்த நாட்டில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.