Green Card வைத்திருக்கிறீர்களா.. 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை.. விண்ணப்பிக்க வலியுறுத்தல்

 

அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் 3 வாரங்களில் குடியுரிமை பெறலாம் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் மூன்று வாரங்களில் குடியுரிமை பெறலாம் என்று ஆசிய அமெரிக்க பசிபிக் தீவுவாசிகள் (AAPI) Victory Fund தலைவர் சேகர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், தகுதியான கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் குடியுரிமை பெறுவது எளிது என்று அவர் கூறியுள்ளார். நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பான்மையான இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது சுமார் 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் வைத்தியர்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற திறமையான மக்கள் உள்ளனர்.

கிரீன் கார்டு பெற்று ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் உடனடியாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நரசிம்மன் வலியுறுத்துகிறார். ஏனெனில், அவர்களின் வாக்குகள் இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது, இந்திய அமெரிக்கர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.