உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் திரும்ப பெற முடிவு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

 

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வர கொரோனா தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தரக்கோரியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு அரிதினும் அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுகள் குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதாலும், சந்தையில் தேவைக்கு அதிகமாகவே பல்வேறு கொரோனா தடுப்பூசி உள்ளதாலும் எங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை திரும்பபெற்றுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.