பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து கோர விபத்து.. 31 பேர் பலியான சோகம்!

 

மாலியின் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடன மாலியில், நேற்று மாலை பர்கினா பாசோவிற்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை இடித்துக் கொண்டு  ஆற்றில் கவிழ்ந்தது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் அங்கு பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஐநா அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி உலகளவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன. ஆனால், உலகளவில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆப்பிரிக்க நாடுகளில் தான் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.