வங்கதேசத்தில் குளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 17 பேர் பலியான சோகம்!

 

வங்கதேசத்தில் பேருந்து குளத்திற்குள் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் பரிஸ்ஹல் மாகாணதின் பண்டாரியா நகரில் இருந்து 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி இன்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஜலகதி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். படுகாயம் அடைந்த 35 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் 7 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஜலகதி மாவட்டத்தில், 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, பண்டாரியா துணை மாவட்டத்தில் இருந்து, தென்மேற்குப் பிரிவுத் தலைமையகமான பரிஷலுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் குளத்தில் விழுந்தது. 17 பேர் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர் என்று கூறினார்.


இந்த விபத்தில் காயமடைந்த ரசல் மொல்லா கூறுகையில், நான் ஓட்டுநரின் இருக்கை அருகே அமர்ந்திருந்தேன். பேருந்தை ஓட்டும் போது ஓட்டுநர் கவனமாக இல்லை என்றும், தனது உதவியாளரிடம் தொடந்து பேசி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். இந்த விபத்தில் தனது 75 வயதான தந்தை உயிரிழந்துள்ளார். மேலும், தனது மூத்த சகோதரர் காணவில்லை என்று தெரிவித்தார்.

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் ஆறு, குளங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.