புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 14 பேர் உடல்நசுங்கி பலியான சோகம்!

 

மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தென்மேற்கில் சல்மா கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயம், மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு நேற்று சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 45-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.  

கெப்லுன் - ஷல்பா நகர் இடையேயான நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயம் அடைந்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.