அமெரிக்கா சென்ற 2 வாரத்தில் சடலமாக மீட்கப்பட்ட 2 இந்திய இளைஞர்கள்.. கலக்கத்தில் குடும்பத்தினர்

 

அமெரிக்காவில் 2 இந்திய இளைஞர்கள், அவர்களது குடியிருப்பிலேயே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் 2 இந்திய இளைஞர்கள் அவர்களது குடியிருப்பிலேயே சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்புடைய இளைஞர்கள் இருவரும் 2 வாரங்களுக்கு முன்னர் தான் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். இதில் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22). இன்னொருவர் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த நிகேஷ் (21) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாணவரின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் அவரது அறைத் தோழரின் மரணத்திற்கான காரணம் குறித்தும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தினேஷின் அருகில் உள்ள அறையில் வசிக்கும் நண்பர்கள் சனிக்கிழமை இரவு எங்களுக்கு தொடர்புகொண்டு அவரது மரணம் மற்றும் அவரது ரூம்மேட்டின் மரணம் குறித்தும் தகவல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தினேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றே அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28-ம் தேதி கனெக்டிகட் மாகாணத்தில் ஹார்ட்ஃபோர்ட் பகுதிக்கு மேற்படிப்பிற்காக தினேஷ் சென்றுள்ளார் என்றும், சில நாட்களுக்கு பின்னர் அதே பகுதிக்கு நிகேஷ் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருவரும் அவரவர் நண்பர்கள் மூலம் அறிமுகமானவர்கள் என்பதால், அமெரிக்காவிற்கு சென்றதும் ஒரே அறையில் தங்கியுள்ளதாகவே குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர். இதனிடையே, தினேஷின் உடலை மீட்க ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி ஆகியோரின் உதவியை நாடியுள்ளதாக தினேஷின் குடும்ப உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வனபர்த்தி சட்டமன்ற உறுப்பினர் மேகா ரெட்டியும் இந்த விவகாரத்தில் உதவ முன்வந்துள்ளதாக தினேஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை நிகேஷின் குடும்பத்தினரிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு நிகேஷின் மரணம் தொடர்பில் தகவலேதும் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.