மாதவிடாய் வலியை குறைக்க கருத்தடை மாத்திரை.. 16 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்!

 

இங்கிலாந்தில் மாதவிடாய் கால வயிற்று வலியை குறைக்க கருத்தடை மாத்திரை எடுத்து கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள லின்கன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் லேலா கான். 16 வயது பள்ளி சிறுமியான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாதவிடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார். இந்த நிலையில் கடந்த 5 -ம் தேதி  லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

‘ஸ்டமக் பக்’ என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி நோயால் லேலா தாக்கபட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறுநாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முயன்ற போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 13-ம் தேதி ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் லேலா துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.

குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது. லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் அளித்த பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.