பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்தில் 26 பேர் பலி.. பயணிகள் ஒரு பக்கமாக நின்றதால் சோகம்!!

 

பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது.

இதனால் பீதியடைந்த பயணிகள் படக்கின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர். இதனால், ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை (லைப் ஜாக்கெட்) அணியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், படகு நிர்வாகத்திடமும் உள்ளூர் போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும், படகில் பயணித்த நபர்களின் அடையாளங்கள் பெறப்பட்டு, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் சிலர், தங்களுடன் பயணம் மேற்கொண்ட சிலர் இன்னும் கரைக்கு திரும்பவில்லை என கூறியதால், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.