பெண்ணின் மூளைக்குள் 8 செ.மீ புழு.. உயிருடன் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

 

ஆஸ்திரேலியாவில் ஞாபக மறதி பிரச்சினையால் மருத்துவமனை சென்ற 64 வயதான பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளைக்குள் உயிருடன் ஒட்டுண்ணி 'புழு' இருந்தது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஞாபக மறதி மற்றும் மன அழுத்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அந்தப் பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்த போதும் எந்த பிரச்சினை என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து தலைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியபட்டுள்ளது. மருத்துவர்களையே ஒரு நிமிடம் இது அதிர்ச்சி அடைய வைத்து விட்டதாம். ஏனெனில், இதற்கு முன்பாக மனித மூளைக்குள் ஒட்டுண்ணி புழு இருந்ததாக எங்குமே பதிவாகவில்லை. மருத்துவ உலகில் மிகவும் அரிதான பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு 64-வயது பெண்ணுக்குதான் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, “ஆஸ்திரேலியவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு தொடர்ந்து கீழ் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் இரவு வியர்வை ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களாக தொடர்ந்து இந்த பிரச்சினை நீடித்து வந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அதன்பிறகு மீண்டும் 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் வந்துள்ளது.

இதனால், தலைநகர் கான்பெராவில் உள்ள மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது மூளையில் வினோதமாக எதோ இருப்பது தெரியவந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மூளையில் ஏற்படும் தொற்று பாதிப்புகளுக்கு அவ்வப்போது நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளிப்பது வழக்கம்.

ஆனால் இதுபோன்று மூளையில் ஒட்டுண்ணி புழு இருந்தது இதுவரை யாரும் அறிந்திடாதது. பெண்ணின் மூளையில் இருந்தது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தை சேர்ந்த லார்வா புழுவாகும். மருத்துவ வரலாற்றிலேயே இது ஒரு யுனிக் விஷயமாக பார்க்கப்படுகிறது” என்றார்.

ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு பற்றிய தகவல் Emerging Infectious Diseases என்ற இதழில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் மலைப்பாம்புகள் இரைப்பையில் தான் காணப்படும். இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், “மலைப்பாம்பின் கழிவு மூலமாக இந்த ஒட்டுண்ணி புல்வெளியில் வந்து இருக்கலாம். இதன் பின்னர் ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் வாய் வழியாகவோ, அல்லது எதோ ஒரு வகையிலோ சென்று இருக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.