இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்.. இரண்டிலும் கரு... மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்!
அமெரிக்காவில் 2 கருப்பைகளுடன் பிறந்த 32 வயது பெண் ஒருவர், ஒரே நேரத்தில் 2 கருப்பைகளிலும் கர்ப்பம் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர் (32). இவர், பிறக்கும்போதே மிக அரிய நிலையான ‘யூட்ரஸ் டைடெல்பிஸ்’ (Uterine Didelphys) என்ற மருத்துவச் சொற்களில் அழைக்கப்படும் இரட்டை கருப்பைகளோடு பிறந்தார். இவரது கணவர் காலேப். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். எட்டாவது வார பரிசோதனையின்போது கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு இருப்பது தெரிய வந்தது.
பிறக்கும்போதே மிக அரிதாக ஒரு சில பெண் குழந்தைகள் இரண்டு கருப்பை அல்லது இரண்டு கருப்பை வாயுடன் பிறப்பார்கள். இதையே மருத்துவ உலகில் `யூட்ரஸ் டைடெல்பிஸ்' என்று குறிக்கின்றனர். 17 வயதிலிருந்தே தனக்கு இரட்டை கருப்பை இருப்பதை கெல்சி அறிந்திருந்தார். முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்ததால் எவ்வித சிக்கலும் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.
கெல்சி தற்போது சிகிச்சை பெற்று வரும் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் பர்மிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மையம், இரண்டு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கருத்தரிப்பது பத்து லட்சத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே நடக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய கருவியல் மருத்துவர் ரிச்சர்ட் டேவிஸ், “கெல்சியின் நிலை மிகவும் தனித்துவம் வாய்ந்தது மற்றும் அரிதானது. ஆயிரத்தில் மூன்று பெண்கள் இரண்டு கருப்பைகளோடு, கருப்பை வாய்களுடன் பிறக்கின்றனர்.
ஆனால், இந்த முறை இரண்டு கருப்பையில் ஒவ்வொரு கரு உருவாகியிருந்தது. தனித்தனி கருமுட்டைகளிலிருந்து வளரும் இக்குழந்தைகளைச் சகோதர இரட்டையர்கள் (fraternal twins) என்று குறிப்பிடலாம். தனித்தனி கருப்பைகளில் வளரும் குழந்தைகளைக் குறிப்பதற்கு பிரத்தியேக மருத்துவ சொல் இல்லை.
இந்த முறை கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் மிகவும் சோர்வாக இருந்ததாக கெல்சி தெரிவித்தார். பிரசவத்தின்போது இரண்டு கருப்பைகளும் தனித்தனியாகச் சுருங்கும். எனவே, கருப்பைகளின் அசைவுகளைக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெல்சி கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களில் என் இரண்டு கருப்பைகளும் பிரிந்திருப்பதை உணர முடிந்தது. எங்களின் இரட்டைக் குழந்தைகளையும் கிறிஸ்துமஸ் அன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். கெல்சியின் நிலையை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.